

வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகளிடம் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை கருவியை வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவியை மாநிலம் முழுவதும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விலங்குகள் வனத்தை விட்டு வெளியில் வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் உயிர் சேதம் மற்றும் பயிர் சேதம் ஏற்படுகிறது. இந்நிலையில் விலங்கு களால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தமிழக வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை கருவி ஒன்று உருவாக்கப்பட்டு வால்பாறை வனப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி மூலம் அப்பகுதி யில் மனித உயிரிழப்பு தடுக்கப் பட்டுள்ளது.
இக்கருவி குறித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
விலங்குகள் நடமாட்டத்தை கண் காணிக்க பிரத்தியேக கருவி ஒன்றை வனப்பகுதியில் பொருத்தியுள் ளோம். அந்த கருவியில் உள்ள சென்சார், சுமார் 3 அடி மற்றும் 10 அடி உயரத்துக்கு மேல் உள்ள விலங்குகள் காட்டைக் கடந்து சென்றால் கண்டுபிடித்துவிடும். உடனடியாக அதிலுள்ள சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வன அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களின் செல்போன்களுக்கு விலங்கு நடமாட்டம் குறித்த எச்சரிக்கையை குறுந்தகவலாக அனுப்பிவிடும். மேலும் ஆங் காங்கே வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளிலும் விலங்கு நடமாட்டம் குறித்த எச்சரிக்கை ஆடியோவை ஒலிக்கச் செய்யும்.
இந்த எச்சரிக்கை வந்தால் அப்பகுதி வழியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் 20 இடங்களில் இந்த சென்சார் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவு ரூ.5 லட்சம்.
தற்போது இந்த சென்சாருக்கு பதிலாக கேமராவும் வந்துவிட்டது. இது இரவிலும் படம் பிடிக்கக் கூடியது. இந்த வசதி ஏற்படுத்தப் பட்ட பிறகு கடந்த ஓராண்டாக வால்பாறை பகுதியில் விலங்கு களால் மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வன உயிரின காப்பாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை, நீலகிரி, ஓசூர் போன்ற பகுதியில் வன விலங்குகள், மக்கள் வாழிடங்களுக்கு வந்து அடிக்கடி இடையூறு ஏற்படுத்துகின்றன. இதை சமாளிக்க வால்பாறையில் பொருத்தப்பட்டுள்ளதைப் போன்ற முன்னெச்சரிக்கை கருவியை மாநிலம் முழுவதும் பிரச் சினைக்குரிய இடங்களில் பொருத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வசதியை ஏற்படுத்தி யதற்காக தமிழக வனத்துறைக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரியில் விருது வழங்கி பாராட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.