வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான 4 ஆசிரியர்களிடம் 2 நாள் போலீஸ் விசாரணை - ஓசூர் நீதிமன்றம் அனுமதி

வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான 4 ஆசிரியர்களிடம் 2 நாள் போலீஸ் விசாரணை - ஓசூர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது, ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் சக ஆசிரியர்களான உதயக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு பகிர்ந்து மாணவர்களுக்கு உதவி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து மகேந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே கைதான 4 ஆசிரியர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் ஓசூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு ஓசூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸார் 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து 4 ஆசிரியர்களையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆசிரியர்களிடம் விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும், தனியார் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடைபெறலாம் என்றும் தெரிகிறது.

முன்னதாக ஜாமீன் கேட்டு ஆசிரியர்கள் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in