

உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
நியூட்ரினோ குறித்த ஆய்வுக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மலையைக் குடைந்து ஆய்வகம் அமைப்பதற்காக ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஆய்வகம் அமைக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுகுறித்து நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க செயலர் லெனின் ராஜப்பாவிடம் கேட்டபோது அவர் கூறியது: மேற்குத்தொடர்ச்சி மலையையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. இதற்காக உழைத்த வைகோவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரில் உள்ளூர் மக்களை ஏமாற்ற நினைத்தவர்களும், அதற்கு அரசியல்ரீதியாக துணைபோனவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். இது ஆரம்ப வெற்றிதான். காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதைப்போல, நியூட்ரினோ திட்டத்தையும் கைவிடும் காலம் வரும் என்றார்.
தேனி மாவட்ட விவசாயி தமிழ்த்துரை கூறியது: மலையைக் குடைந்து அமைக்கப்பட உள்ள 130 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 30 மீட்டர் உயரம் கொண்ட ராட்சத குகையில் அணுக்கழிவுகள் கொட்டப்படலாம் என்ற சந்தேகம் இன்னமும் நீங்கவில்லை. அந்த குகையை தோண்டுவதற்காக சுமார் 1 லட்சம் கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்படலாம் என்பதாலும், அணையின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கப்படலாம் என்பதாலும் இத்திட்டத்தை எதிர்க்கிறோம். எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். மக்கள் எதிர்ப்பு காரணமாக ஏற்கெனவே பல மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட திட்டம்தான் இது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக அணி திரண்டதைப்போல மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டால், இத்திட்டம் கைவிடப்படும் வாய்ப்பு உள்ளது என்றார்.
மூத்த விஞ்ஞானியான சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டி. இந்துமதியிடம் கேட்டபோது அவர் கூறியது: நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்துக்கு சமீபத்தில்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குகை மற்றும் ஆய்வகம் பற்றிய வரைபடம் எல்லாமே தயாரித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அளித்து அனுமதி கோரப்படும். அனுமதி கிடைக்கும் வரையில் எந்தப் பணிகளையும் தொடங்க மாட்டோம் என்று ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதைத்தான் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த உத்தரவை திட்டத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருத முடியாது. இந்தத் திட்டம் நிச்சயமாக நிறைவேறும். அதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சிலர் தவறான கருத்துகளைப் பரப்புவதால், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் தொடர்ந்து செய்வோம் என்றார்.
நியூட்ரினோ ஆய்வு மைய கூட்டு ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் ஒன்றான மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன் கூறியபோது, இந்தத் திட்டம் கைவிடப்பட வாய்ப்பே இல்லை. நியூட்ரினோ ஆய்வு மையம் மற்றும் உயர் இயற்பியல் ஆய்வு மையம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எதிரே உள்ள வாடகை கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் ஆய்வுப்பணிகளையோ, கருத்தரங்கு உள்ளிட்ட தொடர் பணிகளையோ நீதிமன்ற உத்தரவு பாதிக்காது. இப்போது கூட கருத்தரங்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.