

இரு கண்ணிலும் பார்வை இழந்தும் இறக்கும் வரையிலும் எழுதிய எழுத்தாளர் கமாலின் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகங்களை பதிபிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டபம் முகாமில் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.எம்.கமால் வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர் என பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கியவர்.
பார்வையிழந்தும் எழுதிய எழுத்தாளர்
வரலாறு, இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயவியல் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட கமால் தொடர்ச்சியாக பல்வேறு ஆவணக் காப்பகங்களில் நூல்களை வாசித்து கிளைக்கோமா என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் 2002 ஆம் ஆண்டில் தமது 74வது வயதில் இரு கண்களின் பார்வையையும் முற்றிலுமாகவே இழந்தார். பார்வையையை முழுமையாக இழந்த பின்னரும் தமது முதுமையையும் பொருட்படுத்தாமல் உதவியாளர்களின் உதவியோடு ஆறு நூல்களை எழுதினார்.
முன்னதாக கமாலின் வரலாற்று, இலக்கிய, எழுத்துப் பணிகளைப் பாராட்டி தமிழ்ப்பணிச் செம்மல் விருது, சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி விருது, சேவா ரத்னா விருது, ராஜா தினகர் விருது, தமிழ்மாமணி விருது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது, இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது, வள்ளல் சீதக்காதி விருது, பசும்பொன் விருது ஆகியன வழங்கப்பட்டன. கடந்த 31.05.2007 அன்று ராமநாதபுரத்தில் கமால் காலமானார்.
பின்னர் 2010ம் ஆண்டில் தமிழக அரசு கமால் எழுதிய சேதுபதி மன்னர் வரலாறு, சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள், விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், மாவீரர் மருது பாண்டியர், மன்னர் பாஸ்கர சேதுபதி, சேதுபதி மன்னர் செப்பேடுகள், சேதுபதியின் காதலி, சீர்மிகு சிவகங்கைச் சீமை, சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும், திறமையின் திரு உருவம் ராஜா தினகர், மறவர் சீமை மாவீரன் மயிலப்பன், ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், செந்தமிழ் வள்ளல் சீதக்காதி, இராமர் செய்த கோயில், நபிகள் நாயகம் வழியில், முஸ்லிம்களும் தமிழகமும் ஆகிய 16 நூல்களை நாட்டுடமையாக்கியது.
கமாலின் உதவியாளராக பணியாற்றியவரும் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான பேரா. அப்துல்சலாம் கூறியதாவது:
''கமால் இல்லையேல் சேதுநாட்டிற்கு வரலாறே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சேது நாட்டின் வரலாற்றை தமிழகம் மட்டுமின்றி அமெரிக்கா வரையிலும்கொண்டு சென்று அமெரிக்கா தக்சான் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றவர் கமால். நான்காம் தமிழ்ச்சங்கத்தை துவங்கிய பாண்டித்துரைத் தேவர் பிறந்த ராமநாதபுரத்தில் தமிழ் சங்கத்தையும் கமால் நிறுவினார்.
கமால் எழுதிய 16 நூல்களும் அவர் காலமாவதற்கு முன்னரே விற்றுத் தீர்ந்து விட்டன. இன்று கமாலின் நூல்களில் ஒன்று கூட விற்பனைக்கு கிடையாது. இது தவிர கிழவன் சேதுபதியின் புதையல், சேது நாட்டில் உள்ள ஊர்களும் பெயர்களும், பெரியபட்டணத்தின் வரலாறு, சேதுநாட்டு பேச்சு வழக்கு, தெரிந்து கொள்வோம் திருமறையை, வள்ளல் பி.எஸ். அப்துல்ரகுமானின் கதை ஆகிய நூல்கள் அச்சிடப்படாமல் கையழுத்துப் பிரதிகளாக உள்ளன.
நாட்டுடமையாக்கப்பட்ட 16 புத்தகங்கள் மற்றும் கையழுத்து பிரதிகளாக உள்ள ஆறு புத்தகங்கள் என 22 புத்தகங்களையும் அரசே பதிப்பித்து வெளியிட்டு கமாலின் எழுத்துப் பணிக்கு மகுடம் சூட்டவேண்டும்'' என்றார்.