

ஸ்ரீபெரும்புதூர் அருகே கப்பரோ என்ற தனியார் தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி நிர்வாகத்துக்கு மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கப்பரோ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 32 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை என கூறப் படுகிறது. இதைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் இந்நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் பயிற்சி பெறாத தற்காலிக தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாகம் பணிகளை தொடர்ந்து நடத்தியதாக தெரிகிறது. மிகக் கவனமாக செய்ய வேண்டிய இப்பணியில் தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளின்படி பயிற்சி பெற்ற தொழிலாளர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். ஆனால் எந்தப் பயிற்சியும் பெறாத தொழிலாளர்களை ஈடுபடுத்தப்படுவதாக நிர்வாகம் மீது சிஐடியு தொழிற்சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு துறை துணை இயக்குநர் காமராஜிடம் புகார் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தப் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலை பாதுகாப்பு ஆய்வாளர் அலுவலகம் முன்பு பிப்ரவரி 27-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக சிஐடியு அறிவித்தது. இதைத்தொடர்ந்து தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் கப்பரோ தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இந்த ஆய்வில் தொழிற்சாலையினுள் சில விதிமீறல்களை கண்டுபிடித் திருக்கிறோம். அது குறித்து விளக்கமளிக்க தொழிற்சாலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்’ என்றார்.