Published : 05 Mar 2015 11:14 AM
Last Updated : 05 Mar 2015 11:14 AM

பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது: தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் டூ பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடந்த தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். தேர்வில் பிட் அடித்த 3 தனித் தேர்வர்கள் பறக்கும் படையினரிடம் சிக்கினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. காலை 9.45 மணிக்கு அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வு அறைக்கு வந்துவிட்டனர். சரியாக 10 மணிக்கு வினாத்தாள் விநியோகிக்கப்பட்டது. வினாத்தாளை படித்துப் பார்க்க மாணவர்களுக்கு 10 நிமிடம் அனுமதி அளிக்கப்பட்டது. 10.10 முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்தனர். பின்னர் 10.15 மணிக்கு தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்தது.

மொத்தமுள்ள 2,382 மையங்களில் தனித்தேர்வர்கள் உட்பட 8.86 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு அறைக்கு செல்லும் முன்பு மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெளிநபர்கள் யாரும் தேர்வு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் 144 மையங்களில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி, கிண்டி ஐஐடி வனவாணி மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, முதன்மைச் செயலர் டி.சபீதா, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வேப்பேரி பென்டிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி ஆய்வுசெய்தார். அப்போது, தேர்வெழுதிய மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கல்வித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த 368 பறக்கும் படையினர் பல்வேறு பள்ளிகளில் ஆய்வு நடத்தினர். தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தேர்வறையில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதாக மதுரையில் ஒரு தனித் தேர்வரும், சென்னையில் 2 தனித் தேர்வர்களும் பிடிபட்டதாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார். இன்று தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x