Last Updated : 20 Mar, 2015 10:10 AM

 

Published : 20 Mar 2015 10:10 AM
Last Updated : 20 Mar 2015 10:10 AM

வாட்ஸ்அப் மூலம் பிளஸ் டூ வினாத்தாள் பகிர்வு: ஓசூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் கைது - கணிதப் பாடத்துக்கு மறு தேர்வா?

ஓசூரில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது செல்போன் மூலம் வினாத்தாளை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் பில் சக ஆசிரியர்களுக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில் விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிளஸ் டூ மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது வழக்கம். இதற்காக சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் உதவுவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில் தற்போது நடக்கும் பிளஸ் டூ பொதுத் தேர் வில் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன் படுத்த தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வு வினாத்தாளை இரண்டு ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவியதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது: ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் பள்ளியில் நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின் போது, ஒரு அறையில் 20 மாணவர் கள் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஒரு மாணவர் தேர்வு எழுத வரவில்லை. அந்தப் பள்ளியில் தேர்வு கண்காணிப் பாளராக செயல்பட்ட விஜய் வித் யாலயா பள்ளி ஆசிரியர் மகேந் திரன், தேர்வு எழுத வராத மாணவ னின் வினாத்தாளில் இருந்த ஒரு மதிப்பெண் கேள்விகளை செல்போன் கேமராவில் படம் பிடித்து, அதை சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். இதேபோல் மற்றொரு அறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் கோவிந்தன் என்பவரும் செயல்பட்டுள்ளார்.

அப்போது, பறக்கும் படை அலுவலர்கள் தேர்வு அறைக்குள் திடீரென நுழைந்து, மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர் வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். உடனடியாக இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு கண்காணிப்பு பொறுப்பாள ராகப் பணியாற்றிய அனைவருக் கும் கல்வி இயக்க இணை இயக்குநர் நாகராஜ்முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட எஸ்பி கண்ணம்மாளிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகார் அளித்தார்.

சிறையில் அடைப்பு

மாவட்டக் குற்றப்பிரிவு போலீ ஸார் வழக்குபதிவு செய்து ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந் தன், உதயக்குமார், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி னர். மேலும், வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் செல்போன் பயன்படுத்தியது பதிவாகியுள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

கடந்த ஆண்டு நடந்த பிளஸ் டூ தேர்வின்போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவி செய்வதாக புகார் எழுந்தது. மேலும் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. ஆனால் அப்போது இந்த புகார்களை கல்வி அலுவலர் மறுத்தார். இச்சம்பவம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், வினாத்தாள் வெளியானதால் பிளஸ் டூ கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி அதிகாரி விளக்கம்

தற்போது வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்வு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் ராமசாமியிடம் கேட்டபோது, தேர்வு அறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சம்பந்தபட்ட ஆசிரி யர்கள் தலைமையாசிரியர் அலு வலகத்தில் செல்போன்களை ஒப்படைக்காமல் அறையில் பயன் படுத்தி, வாட்ஸ்அப் மூலம் வினாத் தாள் அனுப்பி உள்ளனர்.

தனியார் பள்ளி ஆசிரி யர்கள் தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண்தன்ராஜிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

வசூலுக்கு வழி வகுக்கும் மதிப்பெண்

வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்து கொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் கடந்த 2014-ம் கல்வியாண்டில் 265 மாணவர்களும், 237 மாணவிகளும் தேர்வு எழுதி, 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றனர். மேலும், ஓசூர் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை அப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. பாடவாரியாகவும் மாநில அளவில் இப்பள்ளி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இடங்களை பிடிக்கும் மாணவர்களைக் கொண்டும், 100 சதவீதம் தேர்ச்சியைக் கொண்டும், அடுத்தக் கல்வி ஆண்டுக்கான கட்டணம், நிதி வசூல் உள்ளிட்டவற்றை சில தனியார் பள்ளிகள் நிர்ணயம் செய்வதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடரும் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த தேர்வின்போது, ஆசிரியர் ஒருவர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி புரிந்ததாக புகார் எழுந்தது. மேலும், இதற்காக தனியார் பள்ளி நிர்வாகம் சில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமியிடம் கேட்டபோது, உண்மையில்லை எனவும், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் நடப்பாண்டில் தொழில்நுட்ப முறையில் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள்கள் பகிர்ந்த சம்பவத்தின் மூலம் சில தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்வது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இதனால் அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஆண்டு முழுவதும் கடும் முயற்சி எடுத்து படிக்கும் மாணவ, மாணவிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வாட்ஸ்அப்..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ்ஆப் மூலம் பல்வேறு ரகசிய தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது கல்வித்துறையில் வாட்ஸ்ஆப் மூலம் கேள்வித் தாளை அனுப்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x