Published : 07 Mar 2015 09:31 AM
Last Updated : 07 Mar 2015 09:31 AM

தொழிற்சாலைகள் இசைவு ஆணை பெற இணைய வழியில் கட்டணம் செலுத்தும் சேவை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் அறிமுகம்

தொழிற்சாலைகள் இசைவு ஆணை பெற இணைய வழியில் கட்டணம் செலுத்தும் சேவையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவுபெற்ற 46 ஆயிரம் சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இவை செயல்படவும், விரிவாக்கம் செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் உரிய இசைவு ஆணையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும். இந்த இசைவு ஆணைகள் தமிழ்நாடு காற்று மற்றும் நீர் மாசு தடுப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த இசைவைப் பெற இதுவரை மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. கோப்புகள் நகர்வதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இசைவு ஆணைகளை விரைந்து வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் “இணைய வழி இசைவு ஆணை மேலாண்மை சேவை” (ஓசிஎம்எம்எஸ்) அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தொழிற்சாலை நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இசைவு ஆணை பெறுவதற்கான கட்டணத்தையும் இணைய வழியில் செலுத்துவதற்கான சேவையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இது தொடர்பாக வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஓசிஎம்எம்எஸ் சேவை ஜனவரி 20-ம் தேதி தொடங்கப்பட்டது. இச்சேவையில் தொழிற்சாலை பிரதிநிதிகள் இணைய வழியில் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை தரவேற்றலாம். அந்த ஆவணங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும். குறைபாடுகள் இருப்பின், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இமெயில் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். மார்ச் 5-ம் தேதி வரை 600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை பரிசீலனையில் உள் ளன.

ஓசிஎம்எம்எஸ் மூலம் தற்போது சுமார் 4 வாரங்களுக்குள்ளாகவே இசைவு ஆணைகளை வழங்க முடிகிறது. இதற்கான கட்டணம் தற்போது வரைவோலை மூலமாக பெறப்படுகிறது. விரைவில் இணைய வழியில் பெறும் சேவை அறிமுகப்படுத்தப்படும். கோப்புகள் நகர்வு, கூடுதல் தகவல் கேட்டு திருப்பி அனுப்பப்படும் கோப்புகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கு பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்கள் மற்றும் இமெயில்களுக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பும் சேவையும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த சேவையை http://www.tnpcb.gov.in மற்றும் http://tnocmms.nic.in ஆகிய இணையதளங்களில் பெறலாம். இச்சேவையில் குறைபாடுகள் மற்றும் இடையூறுகள் இருப்பின் அதுகுறித்த தகவல்களை tnpcbocmms@gmail.com என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம். இச்சேவையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x