

எல்.இ.டி. தெரு விளக்குகளின் ‘டைமர்கள்’ திருடப்படுவதால் தெரு விளக்குகளுக்கு பூட்டு போட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஒயிட்ஸ் சாலை, எத்திராஜ் சாலை, எல்டாம்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய பேருந்து தட சாலைகளிலும் சுமார் 50 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்.இ.டி. தெரு விளக்குகள் உரிய நேரத்தில் தானாக எரியவும், அணையவும் செய்யும் வகையில் தெரு விளக்கு கம்பங்களில் ’டைமர்’ பொருத்தப்பட்டுள்ளது.
ஒரு டைமரின் விலை ரூ.27 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இந்த டைமர்கள் சமீப காலமாக திருடப்பட்டு வருவதால் எல்.இ.டி. தெரு விளக்குகள் முறையாக செயல்படுவதில்லை என்று புகார்கள் வந்தன. அம்பத்தூர் எஸ்டேட், மேனாம்பேடு, கொரட்டூர், நொளம்பூர், டி.வி.எஸ்.காலனி, கலெக்டர் நகர், ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பல இடங்களில் ‘டைமர்கள்’ திருடு போக ஆரம்பித்துள்ளன.
இது குறித்து மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி. விளக்குகள் திருடு போகாமல் இருக்க பூட்டு போட உத்தரவிடப்பட்டுள்ளது.