Published : 19 Mar 2015 10:13 AM
Last Updated : 19 Mar 2015 10:13 AM

லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டை அனைவரும் அறியும் வகையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஜோஸ் தனபால். கணபதிபுரம் பேரூராட்சியில் வரி வசூலராகப் பணிபுரிந்து வந்தார். ஒரு வீட்டுக்கு குறைவான வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.2,500 லஞ்சம் வாங்கியதாக ஜோஸ் தனபால் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த வர் பெரியண்ணன். ஒரு புகாரை வழக்கு பதிவு செய்யாமல் முடிப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெரியண்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குகளை கையாள்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டில் கூறப் பட்டுள்ள விதிகளை மீறியுள்ளனர். இதனால், அந்த கையேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தீபக், அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ரமேஷ் வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டில் கூறப்பட்டுள்ள விதிகளை போலீஸார் மீறியதாக மனுதாரர் கள் புகார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடந்திருந்தாலும் அதனை மனுதாரர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை கையேடு பாதுகாப் பான, ரகசிய ஆவணம் என்றும், அதனை பொதுப் பார்வைக்கு விட முடியாது என அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. பொது கடமையை நிறைவேற்றும்போது வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அதில் யாரும் விதிவிலக்கு கோர முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், ஒரு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதால் சிபிஐ கையேடு அதன் இணையதளத்தில் அதனை வெளியிட்டது. சிபிஐ கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், லஞ்ச ஒழிப்புத்துறை கையேட்டையும் இணையதளத்தில் வெளியிடுவது சிரமம் அல்ல. எனவே, லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டை லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத் தில் 6 வாரங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x