நாடக நடிகர்கள், சினிமா நடிகர்களை ஒரே மாதிரியாக கருத முடியாது: நடிகர் சித்தார்த் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

நாடக நடிகர்கள், சினிமா நடிகர்களை ஒரே மாதிரியாக கருத முடியாது: நடிகர் சித்தார்த் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில், கிராமியக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து நடிகர் சித்தார்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘மத்திய அரசின் அறிவிக்கை பாரபட்சமாக இருக்கிறது. சேவை வரி விலக்கு சினிமா நடிகர்களுக்கு பொருந்தவில்லை. இது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே, இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு, இந்த மனுவை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

நாடக நடிகர்களின் திறனுடன் சினிமா நடிகர்களை இணைத்துப் பார்க்க முடியாது. பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை ஊக்குவிப்பதற்காக சேவை வரியில் இருந்து கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்கள் பெரும் நிதிச் சிக்கலில் இருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் அதுபோல இல்லை. எனவே, தகுதி இல்லாத இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in