

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.1,575.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் இவர்களுக்கு ஊட்டச்சத்து, மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு வரும் 2015-16-ம் நிதியாண்டில் ரூபாய் ஆயிரத்து 575 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டம்
அதேபோல் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வகை கலவை சாதம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக ரூ. ஆயிரத்து 470 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.140 கோடியே 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வளர் இளம் பெண்கள் பயன்பெறும் வகையில் கிஷோரி சக்தி யோஜனா மற்றும் வளர் இளம் பெண்கள் திட்டம் ஆகியவற்றுக்கு ரூ.84 கோடியே 52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமண நிதியுதவித் திட்டம்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 5,65,800 பேர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 403 கோடியே 8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.703 கோடியே 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருமாங்கல்யம் செய்வதற்கான தங்க நாணயங்களுக்கு ரூ.204 கோடி செலவிடப்படும்.
12 ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு
சென்னை
தமிழகத்தில் எஞ்சியுள்ள 12 ஆயிரத்து 609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலமெங்கும் உள்ள 41 ஆயிரத்து 830 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் எஞ்சியுள்ள 12 ஆயிரத்து 609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் சமையல் எரிவாயு இணைப்பு பெற்று இருக்கும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.