

சினிமா காட்சிகளை நீக்க க்யூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிக்கிறது என்று தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் கூறிய புகாரை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
சென்னையில் திரைப்படத் தயா ரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், திரைப்பட வெளியீடு மற்றும் அதுசார்ந்த பணிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண் டும் என்ற கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் பேசும் போது, ‘‘டிஜிட்டல் சினிமா தொழில் நுட்பத்துக்கு அதிகம் செலவாகிறது. சென்சாரில் நீக்கச் சொன்ன காட்சியை நீக்கவேண்டும் என்றால் க்யூப் நிறுவனத்தினர் ரூ.1.50 லட்சம் கேட்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களால் படத் தயாரிப்புச் செலவு அதிகமாகிறது’’ என்றார்.
இதை ‘க்யூப்’ நிறுவனம் மறுத்துள்ளது. க்யூப் டிஜிட்டல் சினிமா சேவையை வழங்கிவரும் ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனர் செந்தில்குமார், மண்டல தலைவர் ஜானகி, மூத்த மேலாளர்கள் பாலாஜி, சதீஷ் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
க்யூப் மூலம் 2005-ம் ஆண்டில் இருந்து படங்களை ரிலீஸ் செய்துவருகிறோம். ஒரு படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யும்போது ஒரு நாளுக்கு ஒரு காட்சி என கணக்கிட்டு வாரத்துக்கு ரூ.3500 வரை மட்டுமே கட்டணம் பெறப்படுகிறது.
படம் மாதக்கணக்கில் ஓடினாலும் அதிக பட்சம் ரூ.20 ஆயிரம் வரைதான் தயாரிப்பாளரிடம் பெறப்படும்.
அதேபோல, ஒரு படத்தில் ‘மாஸ் டரிங்’ தொழில்நுட்ப வேலைகள் செய்ய மற்ற நிறுவனங்கள் ஒரு தொகை நிர்ணயிக்கின்றன. ஆனால், க்யூப் சார்பில் எந்த கட்ட ணமும் இதுவரை பெற்றதில்லை.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒரு படம் எடுக்கப்படும்போது ஒரிஜினல் காப்பி கொண்டுவரப் படும். அதில் முதல்கட்ட சர்வீஸ் தொழில்நுட்ப வேலைகள் முடிந்து சென்சாருக்கு போகும்போதோ, சென்சார் வேலைகள் முடிந்து சில இடங்களில் காட்சிகள் வெட்டப் படுவதற்கோ, மூன்றாவதாக திரை யரங்குக்குச் சென்ற பிறகு படக் குழுவினர் கேட்டுக்கொள்வதின் பேரில் சில இடங்கள் வெட்டப் படுவதற்கோ நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. அதற்கு மேலும், 4-வது, 5-வது என்று வெட்டப்பட வரும்போதுதான் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் பாலும் எந்த படமும் அதுவரை போனதில்லை. இப்படி இருக்கும் போது, நாங்கள் லட்சங்களில் கட்டணம் வசூலிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது.
இவ்வாறு ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி நிறுவனத்தினர் கூறினர்.