தமிழகம் முழுவதும் 3.57 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: அமைச்சர் காமராஜ் பதில்

தமிழகம் முழுவதும் 3.57 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: அமைச்சர் காமராஜ் பதில்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 3.57 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், ‘‘ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக புதிய அட்டை வழங்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது அமைச்சர் ஆர்.காமராஜ் குறுக்கிட்டு பேசியதாவது:

தமிழகம் முழுவதும் இதுவரை புதிதாக 11 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3 லட்சத்து 57 ஆயிரம் போலி ரேஷன் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 97 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. மக்கள்தொகை எண்ணிக்கையைவிட, ரேஷன் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள்தொகை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 60 நாளில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும். ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்தால் தனி ரேஷன் அட்டை கிடைக்காது. அதேநேரத்தில் ஒரே வீட்டில் தனித்தனியாக சமையல் செய்தால் புதிய ரேஷன் அட்டை பெறலாம்.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கன்னிப் பேச்சு

உறுப்பினர்கள் பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட்), எம்.ரெங்கசாமி, எஸ்.வளர்மதி (அதிமுக) ஆகியோரும் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசினர். ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினரான வளர்மதி தனது கன்னிப்பேச்சில், மீன்பிடி சாதனங்கள், கொசு வலை ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதைப் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in