

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை யில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமாகாவில் புதிய உறுப்பினர் களைச் சேப்பதற்காக 63 லட்சம் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கவுள்ளோம். இதையடுத்து ஏப்ரல் இறுதியில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும். பின்னர் தமிழகம் முழுவதும் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.
நாகை மாவட்டத்தில் பெண் நீதிபதி மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் மாநில அரசு முழுக்கவனம் செலுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரித்துள்ள அதிமுக, அதற் கான காரணத்தை எடுத்துரைக்க வேண்டும்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவைப்பட்டால் இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போதே, பாஜக அரசு ரயில்வே பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.