Published : 16 Mar 2015 11:03 AM
Last Updated : 16 Mar 2015 11:03 AM

அதிமுக மகளிரணி மருத்துவ முகாமில் 2,037 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை: கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிப்பு

அதிமுக மகளிரணி சார்பில் தருமபுரியில் நடைபெற்ற மருத் துவ முகாமில் 2,037 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் கடந்த மார்ச் 6-ம் தேதி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

தருமபுரியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மட்டும் 2,037 பெண்கள் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொண்டனர். இதற்கு முன்பு ஒரே இடத்தில் 971 மகளிர் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டது தான் சாதனை யாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இச்சாத னையை மிஞ்சும் வகையில் தருமபுரி மருத்துவ முகாம் அமைந்துள்ளது.

இந்த புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை, கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நடுவர் லூசியா சினிகலைசி சென்னையில் வழங்க, அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் சார்பில், கட்சியின் மகளிரணி செயலர் எல்.சசிகலா புஷ்பா எம்பி பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய லூசியா சினிகலைசி, ‘‘மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாமில் இவ்வளவு பேர் பயன்பெற்றிருப்பது உலக சாதனை மட்டுமல்ல, தமிழகம் உலகுக்கு கூறும் செய்தியாகும். இது போன்ற மருத்துவ முகாம்கள் உலக அளவில் நடைபெறுவது அவசியம்’’ என்றார்.

அப்போது தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி விசாலாட்சி நெடுஞ்செழியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x