

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கைத்தறி ஜவுளிகளை உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கு சாதாரண நாட்களில் ரூ.100, விசேஷ காலங்களில் ரூ.150 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் 30 ஆண்டுகளுக்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டதாகும். கச்சாப் பொருட்கள் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு போன்ற காரணங்களால் முழு மானியம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 2012 மார்ச் முதல் 2014 ஆகஸ்ட் வரை அரசிடம் இருந்து வர வேண்டிய தள்ளுபடி மானியத் தொகை சுமார் ரூ 300 கோடி இதுவரை வரவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். கோ-ஆப் டெக்ஸ் துணி ரகங்களை கொள்முதல் செய்வது குறித்து ஒவ்வோர் ஆண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
எனவே, கைத்தறி துறை அதிகாரிகள், கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் / மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோரை கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு, கூட்டுறவு சங்கத் தலைவர்களின் முடிவின்படி ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்வதற்கான உற்பத்தி திட்டத்தை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.