

கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் போலீஸார் பாரபட்சம் காட்டுவதால், வழக்கு களை வேறு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்திடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடு குறித்து உ.சகாயம் மதுரையில் 8-ம் கட்ட விசாரணை நடத்தி வருகிறார். இடைக்கால அறிக்கையை தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 வங்கிகள் இந்த விவரங்களை அளித்துள்ளன.
இந்நிலையில், இன்டஸ்வங்கி அதிகாரிகள் நேற்று சகாயத்தை சந்தித்தனர். இதுகுறித்து விசாரணை குழு அலுவலர் கூறும் போது, குவாரிகளை காட்டி வங்கியில் கடன் பெற்ற அதிபர்கள் பலர் கடனை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். குவாரி செயல்படாத நிலையில், இந்த கடனை வசூலிக்க வங்கிக்கு உதவ வேண்டும் எனக் கேட்டனர் என்றார்.
நீர்வளப் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத் தலைவர் பி.சோமசுந்தரம் சகாயத்திடம் அளித்த மனு குறித்து கூறியது: மதுரை மாவட்ட ஆட்சியராக அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி. வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் இருந்தபோது குவாரிகள் மீதான புகார் குறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. குவாரிகளை பினாமி பெயரில் நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறிவிட்டது. இந்த ஆண்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய குவாரிகளை பினாமி பெயரில் பிரபல குவாரி அதிபர்கள் நடத்தினர். இந்த விவரங்களை இவ்வழக்கில் கைதானோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவிலேயே தெரிவித்துள்ளனர். ஆனாலும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாரி அதிபர்களுக்கு சாதகமாக போலீஸார் செயல்படுவதால் நியாயமான விசாரணை நடைபெறாது. இதனால் குவாரி அதிபர்கள் மீதான அனைத்து வழக்கு விசாரணைகளையும் வேறு புலனாய்வு பிரிவுக்கு மாற்றி, உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். குவாரிகளால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மனு அளித்தனர்.