

மனித உரிமை என்ற பெயரில் அமைப்புகளைத் தொடங்கி, சமூகவிரோதிகள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றனரா? தமிழகம் முழுவதும் இதுபோன்ற அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன? நிதி ஆதாரம் எங்கிருந்து வருகிறது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழக டிஜிபி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தி செயல்படும் அமைப்புகள் தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்து அவர் பிறப்பித்த இடைக்கால உத்தரவு விவரம்:
2014, அக். 29-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் எத்தனை அமைப்புகள் செயல்படுகின்றன? இந்த அமைப்புகள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு பணம் பறிக்கின்றனவா? சமூகவிரோதிகளும் இதுபோன்ற அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றனரா? முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகளின் பெயர்களை இந்த அமைப்புகள் பயன்படுத்துகின்றனவா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க தமிழக போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தேன்.
இந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரை வைத்துக் கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 170 அமைப்புகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நான் ஏற்கெனவே கேட்டிருந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை. எனவே, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் சட்டப்படி முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா? அந்த அமைப்புகள் மற்றும் அதை நடத்துவோர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகள் என்ன? இந்த அமைப்புகளை நடத்த எங்கிருந்து அவர்களுக்கு பணம் வருகிறது? வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுகின்றனரா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தமிழக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்றார்.
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, ஆசியன் மனித உரிமை மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமைகள் என்ற பெயரில் போலி அமைப்புகள் ஏராளமாக தொடங்கப்பட்டு செயல்படுகின்றன. இதனால், மனித உரிமைகளுக்காகச் செயல்படும் நல்ல அமைப்புகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார்.
நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது, அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழக அரசு விரிவான பதில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.