

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் என்.சுரேஷ்ராஜன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கில் சுரேஷ்ராஜன் மனைவி பாரதி, தந்தை நீலகண்டபிள்ளை ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் சுரேஷ்ராஜனின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கி வைக்க நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுரேஷ்ராஜன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, நாகர்கோவில் நீதிமன்றத்திலேயே முறையிடுமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுரேஷ்ராஜனின் தந்தை நீலகண்டபிள்ளை சார்பில், நேரில் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றப்பதிவாளர் கடிதம் அனுப்பியதாகக் கூறினார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றப் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சுரேஷ்ராஜன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
தற்போது இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுரேஷ்ராஜன், அவர் மனைவி பாரதி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அதில், சொத்து முடக்கத்தை எதிர்த்துதான் மனுத்தாக்கல் செய்தோம். அந்த மனுவில் சம்பந்தம் இல்லாமல் பிரதான வழக்கை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். பதிவாளர் உத்தரவு பிறப்பிக்கும் முன் எங்களிடம் கருத்து கேட்கவில்லை. கீழ் நீதிமன்ற விசாரணையை கண்காணிப்பது, கீழ் நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இந்த கண் காணிப்பால் கீழ் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போகும். இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஏப். 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.