

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் 3-வது நாளாக அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் நாகராஜ் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாளாக போராட்டம் நடத்தி வந்த பார்வையற்ற பட்டதாரிகள் தமிழக அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நேற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
ஆனால், அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று 3-வது நாளாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்தல் பணிகள் முடிந்து தயாராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்துவருபவர்களில் ஒருவரான நாகராஜன் என்பவர் திடீரென தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர்.
உண்ணாவிரதம் இருந்த மேலும் ஒருவர் மயக்கமடைந்ததையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.