Published : 05 Mar 2015 02:28 PM
Last Updated : 05 Mar 2015 02:28 PM

இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: மக்களவையில் அன்புமணி பேச்சு

இந்தியா முழுவதும் மதுவில்லக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்களவையில் அன்புமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் அவர் பேசியதாவது, "மது குடிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேரும், மற்ற நோய்களால் ஆண்டுக்கு 5 முதல் 7 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள். புகை மற்றும் நோயைவிட, மது குடிப்பதனால்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழக்கிறார்கள். எனவே, மதுப்பழக்கம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாகும்.

உலகிலேயே அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறும் நாடாக இந்தியாதான் திகழ்கிறது. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அக்குழு அண்மையில் அளித்த அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடைகளே இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறது. ஆனால், எந்த மாநிலமும் இதை கடைபிடிப்பதில்லை.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான கொள்கை திட்டத்தை வகுக்குமாறு இந்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இதற்கான கொள்கைத் திட்டத்தை விரைந்து வரையறுக்க வேண்டும்.

மதுவின் தீமைகளை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்காக, தேசிய ஆல்கஹால் கொள்கையை இந்திய அரசு உருவாக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுவதைப்போல, நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டி விதிமுறை எண் 47&ல், மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதுதான் அரசின் பணி என்றும், மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து, வேறு எதற்கும் மது பயன்படுத்தப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த வழிகாட்டி விதிகளை மதித்து, நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும். அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்"

இவ்வாறு அன்புமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x