Published : 04 Mar 2015 02:53 PM
Last Updated : 04 Mar 2015 02:53 PM

தள்ளுபடியான வேளாண் கடன்களுக்கு நோட்டீஸ்: தமிழக அரசு தலையிட கருணாநிதி கோரிக்கை

'விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்த பிறகும், கூட்டுறவு கடன் சங்கங்கள் நோட்டீஸ் அனுப்புவது தவறான செயல். தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்' என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2006 ஆம் ஆண்டு மே திங்களில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற அதே மேடையில் நான் மூன்று அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டேன். அதிலே ஒன்று தான் விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்கள் அறவே தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு ஆணையாகும். அவ்வாறே கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயிகள் பயன்பெற்றனர். பயன்பெற்றதற்கான சான்றிதழ்களும் அந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக அரசு தள்ளுபடி செய்த விவசாயக் கடனை, ஒன்பதாண்டுகள் கழித்து திடீரென்று இப்போது அசல் மற்றும் வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பி வருவதாகச் செய்திகள் வந்துள்ளன.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மனைவி சுசீலா என்பவர் நடுக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 9,110 ரூபாய் விவசாயக் கடன் பெற்றிருந்தார்.

தி.மு.க அரசின் அறிவிப்புக்குப்பின், அசல் மற்றும் 1,880 ரூபாய் வட்டியும் சேர்த்து, 10,990 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்பட்டது. தற்போது ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு, கடந்த 18ஆம் தேதி சுசீலாவுக்கு, கூட்டுறவு சங்கத்திடமிருந்து வந்துள்ள நோட்டீஸில், குறுகிய காலக் கடன் தொகை, வட்டியோடு சேர்த்து 30,857 ரூபாயை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென்றும் தவறினால் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.

சுசீலாவைப் போலவே மேலும் பல விவசாயிகளுக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்தச் செய்திகள் உண்மையானால், தமிழக அதிமுக அரசு உடனடியாகத் தலையிட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை மீண்டும் வசூலிக்க எடுக்கின்ற முயற்சி தவறானது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான அறிவுரையை கூட்டுறவு கடன் வங்கிகளுக்கு அனுப்பிடுவார்கள் என்று நம்புகிறோம்'' என கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x