Published : 30 Mar 2015 08:29 AM
Last Updated : 30 Mar 2015 08:29 AM

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் கட்டிட முகப்பு இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி: 16 பேர் காயம்; 4 பேர் கைது

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் விருந்தினர் மாளிகையின் முகப்பு நேற்று இடிந்து விழுந்ததில், அங்கு பணியிலிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பொறியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

2009-ல் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டது. இதற்காக, திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில், நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 560 ஏக்கர் பரப்பில் கல்வி சார் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள், விருந்தினர் இல்லம், கேந்திரிய வித்யாலயா பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை மத்திய பொதுப்பணித் துறையினரின் (சி.பி.டபிள்யு.டி) மேற்பார்வையில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் செய்துவருகின்றனர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த “டிஇசி இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர்” என்ற கட்டுமான நிறுவனம், 4 மாடிகள் கொண்ட விருந்தினர் மாளிகையைக் கட்டிவருகிறது. இதன் முன்புறத்தில் 60 அடி உயரத்தில் முகப்பு வளைவு அமைக்கும்பணி நடந்து வரு கிறது.

நேற்று காலை லிஃப்ட் மூலம் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச்செல்லும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென சாரம் சரிந்து கான்கிரீட் கட்டுமானங்கள் மற்றும் கம்பிகள் கீழேயிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்து மூடியது. இதில், 21 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், போலீஸார் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 5 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், பலத்த காயமடைந்த 16 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் மயிலாடுதுறை சின்னசாமி(29), குமார்(35), உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்சுபாஷ்(18), ஒடிசாவைச் சேர்ந்த ஷமீர் குமார் ஷெட்டி(26), கிட்டு(26) ஆகியோர் உயிரிழந்த னர். ஆட்சியர் எம்.மதிவாணன், மத்திய மண்டல ஐஜி ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அங்கு முகாமிட்டு, மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.

அவசர கதியில் பணிகளை மேற்கொண்டதும், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருவேறு பணிகளுக்காக சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதும், தொழிலாளர்களை ஓய்வின்றி பணியில் ஈடுபடுத்தியதும் விபத்துக்குக் காரணம் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருவதாக இருந்தது. கட்டுமானப் பணிகள் தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து அப்போது ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இந்தப் புகார்கள் குடியரசுத் தலை வரின் கவனத்துக்கு சென்றதால், அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.

பொறியாளர்கள் மீது வழக்கு

இந்த விபத்து தொடர்பாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த டிஇசி இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் நிறுவன பொறியாளர்கள் ஆனந்த், அந்தோணி அமல் பிரபு, ஒப்பந்ததாரர் சதீஷ்குமார், மேற்பார்வையாளர் அய்யனார் உள்ளிட்ட 4 பேரை திருவாரூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x