

கரூர் எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் அருகேயுள்ள புலியூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு’ என்ற சிறுகதை தொகுப்பு நூலை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டார்.
இந்தப் புத்தகத்தில், ஒரு பிரிவினர் குறித்து அவதூறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பிரிவினர் சாலை மறியல், முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. மேலும், எழுத்தாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கலவரத்தைத் தூண்டும் வகையில் எழுதியது, அவதூறாக மற்றும் ஆபாசமாக எழுதியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புலியூர் முருகேசன் மீது பசுபதிபாளையம் போலீஸார் கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்துள்ளனர்.