திருச்சியில் கைதான சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட்

திருச்சியில் கைதான சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட்
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் சுங்கவரி வசூலிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக கைதான சுங்கத் துறை அதிகாரிகள் உட்பட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிகாரிகள் 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கொண்டுவரும் பொருள் களுக்கு சுங்கவரி வசூலிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இந்தப் புகாரின்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் பல நாட்களாக முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக திருச்சி விமான நிலைய சுங்க கண்காணிப்பாளர்கள் ரவிக்குமார், சிவசாமி, ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், தினேஷ் பிரதாபட், அபிஜித் சக்ரவர்த்தி மற்றும் சுங்க வரி செலுத்தாமல் பொருளை எடுத்துச் செல்ல பணம் கொடுத்த நாகூர்மீரான் ஆகியோரை சி.பி.ஐ. போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த 6 பேரையும் சி.பி.ஐ. ஆய்வாளர் அப்துல்அசிஸ் தலைமையிலான போலீஸார் மதுரை செய்தியாளர் காலனியில் உள்ள சி.பி.ஐ. நீதிபதி கிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அழைத்து வந்தனர்.

நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரையும் மார்ச் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in