Published : 07 Apr 2014 11:30 AM
Last Updated : 07 Apr 2014 11:30 AM

பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஏற்றியவர்களுக்கு தண்டனை கொடுங்கள்: அம்பத்தூர் பிரச்சாரத்தில் வைகோ பேச்சு

பெட்ரோல், டீசல், காஸ் விலை ஏற்றத்துக்கு காரணமானவர் களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலா மணியை ஆதரித்து அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் அன்புமணி ராமதாஸை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது. இரண்டே கால் கிலோ எடை கொண்ட கல்லை கொண்டு அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர்.

நல்லவேளையாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவருக்கு ஏதாவது நடந்திருந்தால் வட தமிழகம் ரத்த பூமியாகியிருக்கும். பாமகவினர் அமைதி காத்தனர். இந்தச் செயலை செய்தவர்கள், தூண்டிவிட்டவர்கள்யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. அதனால், டூரிங் டாக்கீஸில் டவல் போடுவதுபோல ஜெயலலிதா ஒரு டவல் போட்டு பாஜகவில் இடம் பிடிக்க முயற்சிப்பார்.

கருணாநிதியிடம் நான்கைந்து எம்.பி. இருந்தால், உடனே டெல்லிக்கு போய், ‘மோடி என் நண்பர். நான் டெல்லிக்கு போகும்போதெல்லாம் மோடிதான் டீ வாங்கித் தருவார்’ என்று கதைவிடுவார். அதை இதைச் சொல்லி ஒரு மந்திரி பதவி கேட்பார்.

டீசல் விலை, பெட்ரோல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், காஸ் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், அதற்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் தண்டனை கொடுக்க வேண்டும்.

பாஜக அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராவது உறுதி. முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சினைகளைத் தீர்க்க, தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க, ஈழத்தில் விடியல் பிறக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x