Published : 01 Mar 2015 01:47 PM
Last Updated : 01 Mar 2015 01:47 PM

உள்துறைக்கு ரூ. 62 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்

இந்த நிதியாண்டில், உள்துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.62,124.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 10.2 சதவீதம் அதிகமாகும்.

மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பெண்களின் பாதுகாப்பு, காஷ்மீர் பண்டிட்டுகளின் மறுவாழ்வு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றுக்குச் சிறப்புக் கவனம் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்களின் பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிய அவர், நிர்பயா நிதியத்துக்காக மேலும் ரூ. 1000 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.56,372.45 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.62,124.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகளின் மறுவாழ்வுக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.342.50 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டில் ரூ.580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரிய துணை ராணுவமான சி.ஆர்.பி.எஃப் அமைப்புக்கு, ரூ.14,089.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதற்கு ரூ.12,866.12 கோடி ஒதுக்கப்பட்டது.

அதேபோல எல்லைப் பாதுகாப்புப் படைக்கு, ரூ.12,517.82 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் 11,717.46 ஆக இருந்தது.

இந்திய சீன எல்லையைப் பாதுகாக்கும் இந்தோ திபெத் எல்லைக் காவல் படைக்கு ரூ.3,736.47 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டில் இதற்கு ரூ.3,404.93 கோடி ஒதுக்கப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பலவற்றைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு ரூ. 5,196.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 4,937.91 கோடியாக இருந்தது.

தீவிரவாதத்துக்கு எதிரான பணிகளில் ஈடுபடும் கமாண்டோக்கள் கொண்ட தேசிய பாதுகாப்புப் படைக்கு ரூ.636.01 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 537.84 கோடியாக இருந்தது.

நாட்டின் உளவுத்துறைக்கு ரூ.1,270.40 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதற்கு ஒதுக்கீடு ரூ.1,162.79 கோடியாக இருந்தது.

டெல்லி காவல்துறைக்கு ரூ.5,027.98 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.4,647.78 கோடியாக இருந்தது.

மேலும், பாதுகாப்பு தொடர்பான பல்வேறு செலவுகளைச் சமாளிக்க ரூ.840 கோடியும், நாட்டின் பல்வேறு வகையான காவல் படைகளை நவீனமாக்குவதற்கு ரூ.595 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன‌. இவை கடந்த ஆண்டு முறையே ரூ.737.37 கோடி ஆகவும் மற்றும் ரூ.537.50 கோடி ஆகவும் இருந்தன.படைவீரர்கள் தங்கும் முகாம்கள், குடியிருப்புகள், காவல்துறை அலுவலகங்கள், மத்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கான கட்டிடங்கள் போன்றவற்றை கட்டுவதற்காக ரூ.2,426.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வந்து இங்கு அகதிகளாக இருப்பவர்களுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்கா ரூ.750.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x