Published : 15 Apr 2014 11:05 AM
Last Updated : 15 Apr 2014 11:05 AM

கலப்பில்லாத தமிழ் பேச புத்தாண்டில் உறுதியேற்போம்: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் பேச்சு

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆன பிறகும், நம்மிடம் ஆங்கில மோகம் இருப்பது வேதனை. கலப்பில்லாத தமிழைப் பேசுவோம் என தமிழ்ப் புத்தாண்டில் உறுதியேற்போம் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மூ.ராசாராம் கூறினார்.

சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டு கடந்த 2012-ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு விழாவாக கொண் டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

‘இலக்கியத்தில் நகைச்சுவை’, ‘கம்பன் காட்டும் தமிழகம்’ ஆகிய தலைப்புகளில் இளசை சுந்தரம், பி.மணிகண்டன் ஆகியோரின் கருத்துரைகள், ‘தமிழுக்குப் பெருமை.... சங்க காலத்திலா, சம காலத்திலா? என்ற தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம், ’துறை தோறும் தமிழ் வளர்ப்போம்’ என்ற தலைப்பில் கவிஞர் ஏர்வாடி சு.ராதாகிருஷ்ணன் தலைமையில் கவியரங்கம் நடந்தன.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மூ.ராசாராம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கி.தனவேல், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் பி.எஸ்.சச்சு, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாண்டவன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மூ.ராசாராம் பேசியதாவது:

சித்திரைப் பிறப்பு என்பது காலம் காலமாகத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படும் நிகழ்வு மட்டுமல்ல; பண்பாடு, மொழி என பல்வேறு தளங்களிலும் தமிழர்களுக்கு தனி முக்கியத்துவம் மிக்கது.

‘தக்கது வாழும்’ என்ற தத்துவத் தின் தனிப்பெரும் எடுத்துக்காட்டாக, எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்தும் பெருக்கெடுத்துப் பயணிக் கும் தமிழ் நதி, தன் போக்கில் பதிவு செய்திருக்கும் வண்ணமயமான வரலாறு, வேறெந்த மொழிக்கும் இல்லாத ஒரு பேறு! மண்பாண் டங்கள், கல்வெட்டுகள், செப்பேடு கள், ஓலைச்சுவடிகள் எனத் தொடங்கிய தமிழின் பயணம், காகிதம் தாண்டி இன்றைய கணினித் தொழில்நுட்ப யுகத்திலும் பிரமிப்பான சாதனைகளுடன் தொடர்கிறது.

மெக்காலே இந்தியாவில் ஆட்சி செய்தபோது, இந்த மக்களிடம் எதை செய்தால் மேலும் பல ஆண்டுகள் ஆட்சி செய்யலாம் என யோசித்தார். அதற்காக, தாய் மொழியை மறக்கச் செய்து ஆங்கில மோகத்தில் மக்களை இருக்கச் செய்ய ஆங்கில மொழியை கல்வியில் புகுத்தினார். ஆங்கிலேயரிடம் இருந்து நாம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆன பிறகும், நம்மிடம் ஆங்கில மோகம் இருப்பது வேதனை.

கலப்பில்லாத தமிழைப் பேசு வோம் என புத்தாண்டில் உறுதி மொழி எடுத்து, தாய்மொழியான தமிழை நேசிப்போம். தாய் மொழியைப் படிக்காத மாணவனை நோஞ்சான் மாணவனாகக் கருதும் நிலையை உருவாக்குவோம். இவ் வாறு ராசாராம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x