

முத்துப்பேட்டை சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவில், பெரிய கந்தூரி விழாவையொட்டி நேற்று அதிகாலை சந்தனக்கூடு ஊர் வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்ஹா அனைத்து மதத்தினரும் வழிபடும், மத நல்லிணக்கத் தல மாகும். இங்கு ஆண்டுதோறும் பெரிய கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டுக்கான 713-வது பெரிய கந்தூரி விழா கடந்த பிப்.20-ம் தேதி தொடங் கியது.
முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்ன தாக தர்ஹா முதன்மை அறங் காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி இல்லத்தில் இருந்து சந்தனக் குடங்கள் தர்ஹாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, 2.30 மணிக்கு சந்தனக் குடங்கள் தர்ஹாவின் முன் நிறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகளால் அலங்கரிக் கப்பட்ட சந்தனக்கூட்டில் வைக்கப் பட்டன. இதையடுத்து சந்தனக்கூடு ஊர்வலம் தர்ஹாவிலிருந்து புறப் பட்டது. ஆற்றங்கரை பாவா தர்ஹா, அம்மா தர்ஹாவுக்குச் சென்ற சந்தனக்கூடு நேற்று அதி காலை மீண்டும் தர்ஹாவை வந்த டைந்தது.