Published : 30 Mar 2015 09:39 am

Updated : 30 Mar 2015 10:09 am

 

Published : 30 Mar 2015 09:39 AM
Last Updated : 30 Mar 2015 10:09 AM

நைஜீரியாவில் ஜனநாயகத்தின் அர்த்தம்தான் என்ன?

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் (ஓய்வுபெற்ற) அரசியல் அறிவியல் பேராசிரியர் ஜான் டுவான் இப்படிக் கூறுவார்: “ஜனநாயகம் என்பது நல்ல நிர்வாகம் என்பதற்கு இணையான வார்த்தை அல்ல”! வேறுமாதிரி சொல்வதானால், ‘ஜனநாயகம்’ எனும் அலங்கார வார்த்தைப் பயன்பாடு, ஜனநாயக நாடுகளில் பொறுப்பு மற்றும் நல்லாட்சிக்குக் காரணமாக இருக்கவில்லை. அடிக்கடி புகழப்படும் ஜனநாயக முறையிலான அரசு என்பது, ஜனநாயக நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில், ‘நிலை யற்றதாகவும், பலவீனமானதாகவும் மற்றும் நீடித்த ஆபத்தை’க் கொண்டிருப்பதையும், தனது ‘பிரேக்கிங் டெமாக்ரசி’ஸ் ஸ்பெல்’ புத்தகத்தில் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஜனநாயகம் எனும் கருத்தைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் தோல்வி, அரசு நிர்வாகத்தில் நிலையற்ற தன்மையை முடுக்கிவிடக்கூடியது என்கிறார் ஜான் டுவான். அவரது நிலைப்பாடு சில உண்மைகளின் அடிப்படையிலானது. ஜன நாயகம் என்பது பல சமயங்களில் இன ரீதியிலான பாகுபாடு, முதலாளித்துவம் ஆகியவற்றைச் செழிக்கச் செய்வதோடு, ஏழை மற்றும் பணக்காரர்களிடையிலான வேறுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. எனினும், மூன்றாம் உலக நாடுகள் பல, ஜனநாயக அரசு எனும் விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பயன்படுத்துவதன்மூலம் ஜனநாயகத்தின் மோசமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன.


இதைச் சொல்வதால், ஜனநாயகம் என்பதில் நல்ல விஷயங்களே இல்லை என்று அர்த்தமில்லை. ஆனால், நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இந்த அமைப்பு பயன்படுத்தப்படும் விதம் முறைகேட்டுக்கும் மக்களை ஒடுக்குவதற்கும் அடிகோலுகிறது.

வரலாற்று முன்னுதாரணம்

ஐக்கிய ஜனநாயகக் கட்சி (யூ.டி.பி) தலைவர் ஒகோயே, தனது ‘நைஜீரியாவின் நான்காவது குடியரசில் தேர்தல் நிர்வாகம்’ எனும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்: “நைஜீரியத் தேர்தல்களின் வரலாறு, பெரிய அளவிலான முறைகேடுகள், அச்சுறுத்தல்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் படுகொலைகள் ஆகியவற்றால் நிரம்பியது”! ஒகோயே பட்டியலிடும் இந்த விஷயங்கள் வரலாற்று முன்னுதாரணங்களைக் கொண்டவை.

நைஜீரியா சுதந்திரமடைவதற்கு முன்பு அதன் கவர்னர் ஜெனரலாக இருந்த சர் ஜேம்ஸ் ராபர்ட்ஸன், தேர்தல் முறையில் பல விஷயங்களைக் கொண்டுவந்தார். நைஜீரியாவின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையிலும், புதிதாகப் பொறுப்பேற்கும் தலைவர்களின் அதிகாரத்தைப் பலவீனப் படுத்தும் வகையிலும் அவை இருந்தன என்று குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியர் அகின்டோலா.

பிரிட்டன் அளித்த சுதந்திரம் நைஜீரியாவைத் துயரங்களின் சுழற்சிக்குள் தள்ளியது என்கிறார் மற்றொரு வரலாற்றாசிரியர் டேயன். இந்த வரலாற்றுத் துயரங்கள் இன்றும் நைஜீரியாவைப் பீடித்திருக்கின்றன. வரலாற்றிலிருந்து தலைவர்கள் பாடம் கற்கவில்லை. காலனிய அடிமை முறையின் தாக்கத்திலிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை.

உண்மையில், முழுமையான ஜனநாய கத்தைப் பின்பற்றும் நாடுகள் நம்பக மான பேச்சுவார்த்தைகள், ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகளைச் செயல்படுத்துவது ஆகிய விஷயங்களைப் பின்பற்றுகின்றன. ஆனால், நைஜீரியாவில் இவை நடக்கின்றனவா? நைஜீரியாவில் பின்பற்றப்படும் ஜனநாயக முறை பற்றிய சரியான கேள்விகளை நைஜீரிய மக்கள் கேட்கிறார்களா? நைஜீரியாவில் ஜனநாயகம் துல்லியமாக இயங்க வேண்டும் என்றும் நைஜீரிய மக்களின் ஆசைகள் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும் அரசு அதிகாரத்தை உயர்நிலைப் பிரிவினர் கைக்கொள்வதை எதிர்க்க வேண்டும் என்றும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் (ஐடிஇஏ) வாதிடுகிறது. இந்த வாதம் சரியானதுதான். ஆனால் அதைப் பரிசீலிக்க அதிகாரவர்க்கம் ஆர்வம் காட்டவில்லை.

இந்த முறை நடக்கும் தேர்தலில் ஜனநாயகம் என்ற போர்வையில் நடந்த கோர அரசியல் தாண்டவங்களைக் குறிப்பிட வேண்டும்.

வாக்குகளைச் சேகரிப்பதற்காக நைஜீரியத் தலைவர்கள் அலைந்த அலைச் சல்கள், ஒருவரையொருவர் தாக்கி அவர்கள் பேசிய பேச்சுக்கள், அரசியல் கட்சித் தொண்டர்களின் அநாகரிகமான நடத்தைகள், நைஜீரியா பழங்குடியினம் மற்றும் மத ரீதியாகப் பிளவுற்றுக் கிடப்பதை எடுத்துக்காட்டின.

கவலையற்ற தலைவர்கள்

இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய வார்த்தைகள் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தப்பட்டன. மதம் ஒரு அரசியல் ஆயுதமாக மாறியிருக்கிறது. (மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.)யின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர் தற்போதைய அதிபர் குட்லக் ஜொனாதன்; அனைத்து முன்னேற்ற காங்கிரஸின் (ஏ.பி.சி) சார்பில் முகம்மது புகாரி போட்டியிடுகிறார்). முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வடக்கு நைஜீரியா மற்றும் கிறித்தவர்கள் அதிகம் வசிக்கும் தென்மேற்கு நைஜீரியா ஆகிய பகுதிகள், மக்களை வழிநடத்தப்போவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்களின் களங்களாக மாறியிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர், இரண்டு கட்சியினரும் வாக்காளர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. துயரத்தில் இருக்கும் நைஜீரிய மக்களைப் பற்றி அரசியல் தலை வர்கள் கவலைப்படவே இல்லை என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

இவற்றையெல்லாம் பார்த்த பிறகும் மக்கள் கண்மூடித்தனமாகத் தலைவர் களைப் பின்பற்றுகிறார்கள். இந்தக் குளறுபடி களெல்லாம், சரியான தலைவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் முடிவுக்கு வரும் என்று சிலர் வாதிடலாம்.

ஆனால், வாக்களிப்பதற்கு முன்னர் நைஜீரிய மக்கள் இந்தக் கேள்வி களைத் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். நைஜீரியா உண்மையிலேயே ஜனநாயக நாடுதானா? அல்லது இதுதான் நைஜீரியாவின் ஜனநாயகமா?

நைஜீரிய நாளிதழ் 'டெய்லி போஸ்ட்'டில் வெளியான தலையங்கம்.

- தமிழில்: வெ. சந்திரமோகன்

நைஜீரியாநைஜீரிய ஜனநாயகம்நைஜீரிய நாளிதழ்

You May Like

More From This Category

More From this Author