Published : 06 Apr 2014 10:47 AM
Last Updated : 06 Apr 2014 10:47 AM

சோனியா மீது ராம்ஜெத்மலானி தேசத் துரோக குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக செயல்பட்ட டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது அகமது புகாரி என்பவரை சந்தித்ததன் மூலம் சோனியா காந்தி தேசத் துரோகச் செயலைப் புரிந்துள்ளார் என மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எம்.பி. சனிக்கிழமை மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மோடிக்காகவும், வைகோவுக்காகவும் வாக்கு சேகரிப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். நாட்டில் ஊழல் தலைவிரித் தாடுகிறது. மிகப் பெரிய பொருளாதார சீரழிவில் சிக்கித் தவித்து வருகிறோம். அதேசமயம் இந்தியர்களின் ரூ.90 லட்சம் கோடியை சுவீடன், ஜெர்மனி உள்பட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் சிலர் பதுக்கியுள்ளனர். இவற்றை மீட்டால் நாட்டின் அனைத்து கடனையும் அடைத்துவிட முடியும். அடுத்த சில ஆண்டுகளுக்கு மக்கள் வரியே செலுத்த தேவையில்லை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அதை மீட்பதில் ஆர்வம் காட்டவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட கண்டு கொள்ளவேயில்லை. எனவே இதுபற்றி பிரதமர், நிதியமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். அப்பணத்தை மீட்கும் வரை எனது பணி தொடரும்.

டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது அகமது புகாரி என்பவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வந்தே மாதரம் பாடுகிறார்கள் என்பதற்காக அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் செல்லக்கூடாது எனத் தடுத்தவர் இந்த சயீது அகமது புகாரி.

நாட்டின் சட்டப்படி தேசிய கீதத்துக்கு இணையான மரியாதை வந்தே மாதரம் பாடலுக்கும் உண்டு. அதை அவமதிப்பு செய்த சயீது அகமது புகாரியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். அவரைச் சந்தித்ததன் மூலம் சோனியா காந்தி தேசத் துரோகச் செயலைப் புரிந்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனால்தான் எந்த கட்சியிலும் இல்லாத நான் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதர வாகப் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

ஊழலற்ற, நல்ல நிர்வாகத்திறன் படைத்தவர் அவர். மதச்சார்பற்றவராக உள்ள மோடி மீது முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற மதச்சாயத்தைப் பூச முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மையான மதவாதிகள் காங்கிரஸ் கட்சியினர்தான். மக்களைப் பிரித்து ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக ஓட்டுவங்கி அரசியல் நடத்துகின்றனர்.

மோடி ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் கறுப்புப் பணம் மீட்கப்படும். அந்தப் பணத்தைப் பதுக்கிய, ஊழல் செய்த மத்திய அமைச்சர்கள் பலர் சிறைக்குள் தள்ளப்படுவது உறுதி.

முதல்வர் ஜெயலலிதா சூழ்நிலைக் கேற்ப அரசியல் செய்யக்கூடியவர். அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆம் ஆத்மி கட்சி தொடங்கியபோது நானும் அதை ஆதரித்தேன். ஆனால் அந்த கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் நிலைப் பாடு எனக்கு பிடிக்கவில்லை.

இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்தார். பேட்டியின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடனிருந்தார்.

ரஜினிகாந்துக்கு அழைப்பு

‘நடிகர் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவரை சந்தித்து பேச இருக்கிறேன். அதற்கு முன் பத்திரிகைகள் வாயிலாக இந்த கருத்தை அவருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டைப் பாதுகாக்க வேண்டிய சமுதாயப் பொறுப்பு அவருக்கும் உள்ளது. எனவே அதை உணர்ந்து வரும் தேர்தலில் அவர் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். கண்டிப்பாக அவர் பிரச்சாரம் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது’ என ராம்ஜெத்மலானி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x