

அரசு மாணவர் விடுதி விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இதன் 12-வது ஆண்டுவிழா கடந்த 23-ம் தேதி நடந்தது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிலையில், ‘விடுதிக்குள் நடக்கும் விழாக்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று விதி உள்ளது. அதை மீறி விடுதி விழாவில் கலந்துகொண்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காசிமேடு காவல் நிலையத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருவேங்கடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். குற்றவியல் சட்டம் 448-வது பிரிவின் (அனுமதியின்றி உள்ளே நுழைதல்) கீழ் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.