Published : 02 Mar 2015 09:27 AM
Last Updated : 02 Mar 2015 09:27 AM

டீசல் விலை உயர்வு எதிரொலி: வாடகையை உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு; அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், லாரி உரிமையாளர்கள் கி.மீ.க்கு 75 பைசா உயர்த்த முடிவு செய்துள்ளனர். இதனால் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நேற்று முன்தினம் திடீரென உயர்த்தியது.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.34 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, எரிபொருள் செலவை ஈடுசெய்ய முடியாத நிலையில் கி.மீ.க்கு 75 பைசா உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கே.நல்லதம்பியிடம் கேட்ட போது, ‘‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள், அரிசி, பருப்பு, சிமென்ட், பருத்தி, கரும்பு, பருத்தி உட்பட பல்வேறு பொருட்களை ஏற்றிச் செல்ல 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தினமும் இயக்கப்படுகின்றன. கச்சா எண்ணெய் விலை மாற்றம் இல்லாத சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஆச்சரியமாக உள்ளது.

ஒரே நேரத்தில் லிட்டருக்கு ரூ.3க்கும் மேல் உயர்த்தியிருப்பது ஏற்கமுடியாதது. ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ள லாரி தொழில் இந்த டீசல் விலை உயர்வால், மேலும் நலிவடையும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில், கூடுதல் செலவை ஈடுசெய்யும் வகையில் வாடகையை கி.மீ.க்கு 75 பைசா உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இதுதொடர்பாக திங்கள் கிழமை (இன்று) வியாபாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிக்கவுள்ளோம்’’ என்றார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.சுகுமாறனிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை வாபஸ்பெற வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால், வாபஸ் பெறப்படவில்லை. டீசல் விலை இனியும் உயராது என வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில், திடீரென டீசல் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. எனவே, இழப்பை சரிசெய்ய 5 சதவீதம் வரையில் வாடகை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

லாரிகளின் வாடகை கட்டணம் உயர்த்த லாரி உரிமை யாளர்கள் முடிவு செய்துள்ளதால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x