Last Updated : 13 Mar, 2015 11:20 AM

 

Published : 13 Mar 2015 11:20 AM
Last Updated : 13 Mar 2015 11:20 AM

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்

கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் பணிபுரிந்து வந்த 3 விண்வெளி வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

புதன்கிழமை விண்வெளியிலி ருந்து புறப்பட்ட சோயுஸ் விண் கலம், கஜகஸ்தானில் உள்ள ஜெஸ்கஸ்கானில் நேற்று காலை யில் தரையிறங்கியது. இதில் முதன்முறையாக விண்வெளியில் தங்கிய ரஷ்ய பெண் யெலனா செரோவா, அலெக்சாண்டர் சமோகுட்யாவ் மற்றும் அமெரிக்காவின் பாரி வில்மோர் ஆகிய மூவரும் வந்திறங்கினர்.

சோயுஸ் விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கியதை ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸும் உறுதி செய்துள்ளது.

இவர்கள் மூவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டனர். 167 நாட்கள் விண்வெளியில் தங்கிய அவர்கள், மொத்தம் 11.2 கோடி கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளனர் என்று நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் இருந்தபோது, ரஷ்ய வீரர்கள் 50 ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் பழுது பார்ப்பு பணி மேற்கொண்டதாகவும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித் துள்ளது.

விண்வெளியிலிருந்து திரும்பிய வீரர்கள் நலமுடன் இருப்பதாக, இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் ட்விட்டரில் தெரிவித் துள்ளார்.

உக்ரைன் பிரச்சினையால் அமெரிக்கா, ரஷ்யா இடையி லான உறவில் விரிசல் அதிகரித் துள்ள நிலையிலும், ஒரு சில விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின் றன. அதில் சர்வதேச விண்வெளி மையமும் ஒன்றாகும்.

அமரிக்காவின் ஸ்காட் கெல்லி மற்றும் ரஷ்யாவின் மிகைல் கோர்னீன்கோ மற்றும் ஜென்னடி படால்கா ஆகிய மூவரும் வரும் 27-ம் தேதி விண்வெளிக்கு செல்ல உள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x