

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தில் திடீரென பிளவு ஏற்பட்டுள்ளது. சங்கத்தின் செயல் பாடுகளில் திருப்தி, வெளிப் படையான தன்மை இல்லை என தெரிவித்து அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் புதிய சங்கத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் அரசு டாக்டர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்தனர். 46 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த சங்கத்தில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த சங்கத்தில் இருந்து வெளியேறிய சேலம் மாவட்டச் செயலாளர் என்.லட்சுமி நரசிம்மன், கடலூர் மாவட்டத் தலைவர் சாமிநாதன், சென்னை மாவட்ட உறுப்பினர் ரமேஷ் மற்றும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சென்னை மாவட்ட செயலாளர் க.இளஞ்சேரலாதன், பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் இணைந்து, புதிதாக அரசு டாக்டர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கம் (SERVICE DOCTORS POST GRADUATES ASSOCIATION - SDPGA) என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து புதிய சங்கத்தின் நிர்வாகிகள், சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
அரசு டாக்டர்களின் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் முறையாக நடக்கவில்லை. இதை அரசு டாக்டர்கள் சங்க பொறுப்பில் இருப்பவர்களும் கேட்பதில்லை. பல ஆண்டுகளாக இருந்து வந்த அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்களுக்கான ஓட்டுரிமை, 6 மாதத்துக்கு முன்பு பறிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடந்த மாநில செயற்குழுவில் எங்கள் எதிர்ப்பையும் மீறி இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.
ஊக்கத்தொகை கிடைக்கவில்லை
அதேபோல அரசு பட்டமேற் படிப்பு மாணவர்களுக்கு சில மாதங்களாக அரசின் ஊக்கத்தொகை கிடைக்க வில்லை. இதற்கு சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஊக்கத் தொகையை பெற்றுக் கொடுத் ததற்காக, சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் க.இளஞ் சேரலாதன் மற்றும் பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
அரசு டாக்டர்களின் உரிமைக் காக குரல் கொடுக்காத, போரா டாத சங்கம் தேவையில்லை என்று முடிவு செய்தோம். தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு டாக்டர்களின் நலனுக்காக இந்த புதிய சங்கத்தை தொடங்கியுள்ளோம். ஒரு வாரத்தில் சங்கத்தை பதிவு செய்வோம். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எங்களது சங்கம்தான் பதிவு செய்யப்பட்ட சங்கமாக இருக்கும். நோயாளிகள் மற்றும் டாக்டர்களின் நலன்களுக்காக எங்கள் சங்கம் பாடுபடும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.
புதிய நிர்வாகிகள்
புதிய சங்கத்தின் தலைவராக என்.லட்சுமி நரசிம்மன், செயலா ளராக சாமிநாதன், அமைப்புச் செயலாளராக ராமலிங்கம், பொரு ளாளராக ரமேஷ், ஆலோசகராக க.இளஞ்சேரலாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லெட்டர் பேடு சங்கமாக செயல்படும்
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘சங்கத்தின் விதிமுறைகளையும், கட்டுப்பாட்டையும் மீறி செயல்பட்டதால்தான் 2 பேர் நீக்கப்பட்டனர். அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள், மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு பொதுவான ஓட்டுரிமை இல்லை என்று அறிவித்தோம். அதற்கு பதிலாக அரசு பட்டமேற்படிப்பு மாணவர்கள், அவர்களுக்குள் ஓட்டு போட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்துள்ளோம். யாருடைய ஓட்டுரிமையையும் பறிக்கவில்லை. புதிய சங்கத்தில் 50 பேர் கூட இருக்க மாட்டார்கள். அது ஒரு லெட்டர் பேடு சங்கமாகத்தான் செயல்படும்’’ என்றார்.