

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் பெங்களுரூ மாநகரின் குடிநீர் தேவைக்காக புதிய அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில், மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முதல் கட்டமாக ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: காவிரி தண்ணீரைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், கர்நாடக அரசு போதிய அளவு தண்ணீர் வழங்காததால் தற்போது ஒருபோகமாக மாறியுள்ளது. ஒரு போக சாகுபடியே கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசு மேலும் சில அணைகளைக் கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவலைக் குரியது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்ட நிலையிலும், மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. மத்திய அரசின் மவுனத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசு முயன்று வருகிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு, உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் சந்தித்து, கர்நாடக அரசின் திட்டங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறியதாவது: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்திருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
கர்நாடகம் புதிய அணைகளை கட்ட உலகளாவிய டெண்டர் கோரியபோதே இதை தடுத்திருக்க வேண்டும். தற்போது அடுத்தகட்டமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. இது நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தமிழகத் தின் உரிமைகளும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பறிபோகும் சூழ்நிலையை தடுக்க தமிழக அரசு விரைந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த விஷயத்தில் உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.