

பொள்ளாச்சி தொகுதிக்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவரது மகன் பைந்தமிழ்பாரி, மருமகன் டாக்டர் கோகுல் உள்ளிட்டவர்கள் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த மூவரில் பொங்கலூர் பழனிச்சாமிதான் வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பொங்கலூர் பழனிச்சாமி குடும்பத்தில் அவரது மருமகன் டாக்டர் கோகுலுக்குத்தான் இந்த முறை பொள்ளாச்சி தொகுதி என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், மருமகனை சமாதானப்படுத்தி ஒரு வழியாக போட்டியிலிருந்து ஒதுங்க வைத்திருக்கிறார் பொங்கலூர் பழனிச்சாமி.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் ‘தி இந்து’விடம் பேசுகையில், “இப்போதுதான் உங்களை மருத்துவர் அணி மாநிலத் துணைச் செயலாளராக அறிவித்திருக்கிறது கட்சித் தலைமை. அதை வைத்து படிப்படியாக முன்னுக்கு வரலாம். உங்களுக்கு இன்னும் காலம் இருக்கிறது. பாரியை இந்தமுறை எம்.பி.யாக்கிவிட வேண்டும் என நான் நினைக்கிறேன். அதற்கு நீங்கள் குறுக்கே நிற்க வேண்டாம்’ என்று பொங்கலூர் பழனிச்சாமி சொன்ன சமாதானத்தை மருமகன் கோகுல் ஏற்றுக்கொண்டு விட்டார்.
இதையடுத்து 23-ம் தேதி அறிவாலயத்தில் நடந்த வேட்பாளர் நேர்காணலுக்கு தன்னம்பிக்கையுடன் கம்பீரமாய் போய் வந்தார் பைந்தமிழ்பாரி.
அவருக்குத்தான் சீட் என மாவட்டம் முழுக்க பரவலாகப் பேசப்பட்ட நிலையில் பொங்கலூர் பழனிச்சாமி யை சென்னைக்கு அழைத்த தலைமை, “ஏற்கெனவே கட்சியின் சீனியர்களான துரைமுருகன் உள்ளிட்ட இரண்டு பேர் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டுள்ளனர்.
வாரிசுகளுக்கு சீட் கொடுப்பதாக இருந்தால் அந்த இருவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை எனத் தலைமை முடிவெடுத்திருக் கிறது. எனவே, இந்தமுறை உங்களுக்குத் தான் சீட்; போய் தேர்தல் வேலைகளை கவனியுங்கள்’’ என்று சொல்லி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, 26-ம் தேதி காலை சென்னையிலிருந்து திரும்பிய பொங்கலூர் பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகளை அழைத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கி றார்” என்றனர்.
இதுகுறித்து பொங்கலூர் பழனிச் சாமியிடம் நாம் பேசியபோது, “பொள்ளாச்சி தொகுதிக்கு நான் சீட் கேட்கவில்லை. பைந்தமிழ்தான் கேட்டிருந்தார். ஆனால், ‘சில காரணங்களால் வாரிசுக்கு சீட் கொடுக்க முடி்யாது. நீயே போய் வேலை செய். உனக்கு நல்லபேர் இருக்கிறது; ஜெயிச்சுட்டு வருவே’ன்னு தலைவர் சொல்லி விட்டார்.
தலைவரே சொன்ன பிறகு என்ன இருக்கிறது. அதுதான் தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டேன். தலைவர் சொன்னபடி வெற்றியை அவரது காலடியில் சமர்ப்பிப்பேன்” என்றார்.