

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இல்லாத மாற்று அணியை அமைக்க முயற்சித்து வருவதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை யில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழருவி மணியன் கூறியதாவது:
ஊழல் கறைபடிந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும், பாஜக, காங்கிரஸையும் புறம் தள்ளிவிட்டு சமூகப் பொறுப்புணர்வுள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நிற்பதன் மூலம், தமிழகத்தில் வலிமைமிக்க மாற்று அணியை 2016-க்குள் உருவாக்க முடியும்.
உங்கள் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜி.கே.வாசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பதை, அதற்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள லாமா?
நிச்சயமாக. அதற்கான முயற் சியை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், மாற்று அணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பதை உங்களின் யூகத்துக்கே விடுகிறேன்.
மாற்று அணிக்குத் தலைமை யார்?
தமிழகத்தில் இப்படியொரு மாற்று அரசியல் அணி அமையாததற்கு காரணமே, யார் முதல்வர் வேட்பாளர் என்பதுதான். எதிர்க்கட்சித் தலைவர்கள் தாங்களே முதல் அமைச்சர் கிரீடத்தை அணிந்தபடி, நிலைக்கண்ணாடி முன் நின்று ரசிக்கிற மனோபாவத்தில் இருந்து வெளியேறினால் ஒழிய, இந்த அணி அமையாது.
மக்களவைத் தேர்தலில் நீங்கள் அமைத்த அணி தோல்வியடைந்து விட்டதே?
அந்த அணியில் இடம்பெற்றவர் களுக்குள் ஒற்றுமையில்லை. பாமக, தேமுதிக, மதிமுக, பாஜக அணி 2016-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கையோடு சொன் னேன். ஆனால், அந்த நம்பிக் கையை அவர்கள்தான் சிதைத்தார்கள். தேர்தல் முடிந்த பிறகும்கூட, அவர்கள் ஒன்றாக அமர்ந்து தோல்விக்கான காரணங் களை ஆய்வு செய்ய வில்லை.
எனவே, இந்த முறை மாற்று அணி அமைக்கும் முயற்சியில் வியூகத்தை மாற்றி உள்ளேன். நான் யாரையும் கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்க மாட்டேன். நான் நினைக்கிறபடி நல்ல அணி அமைந்தால், அந்த அணியில் காந்திய மக்கள் இயக்கமும் அங்கம் வகிக்கும். காந்திய மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்து, 2021-ல் அதன் தலைமையில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என்றார்.