Published : 18 Mar 2015 08:42 AM
Last Updated : 18 Mar 2015 08:42 AM

தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக பாஜக அரசு செயல்படுகிறது: திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை மறந்து நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் பாஜக தனது சொல் வேறு, செயல் வேறு என்பதை நிரூபித்துள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு 2013-ம் ஆண்டு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் அதை நிறை வேற்றியுள்ளது.

இதன்மூலம் யாருடைய ஒப்புதலையும் பெறாமலேயே, எவ்வளவு நிலங்களை வேண்டுமானாலும் கையகப் படுத்த முடியும்.

கடந்த மக்களவைத் தேர் தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், `பாஜக, தேசிய அளவில் நில எடுப்புக் கொள்கை ஒன்றை வகுத்து பின்பற்றும். வேளாண்மைக்கு பயன்படாத நிலத்தை அறிவியல் முறையை அனுசரித்து கைய கப்படுத்துதல், அதை வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்துதல் ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

நில எடுப்புக் கொள்கை நடை முறைப்படுத்துவதை, தேசிய நிலப் பயன்பாட்டு ஆணையம் தீவிரமாக கண்காணிக்கும்’ என்று அறிவித்தது.

ஆனால், தேர்தல் வாக் குறுதிக்கு மாறாக பாஜகவுக்கு சொல் வேறு, செயல் வேறு என்பதை நிரூபிக்கும் வகையில் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் கருப்பு மசோதவை நிறைவேற்றியுள்ளது. அதிமுக தனது சுயநலத்துக்காக இதை ஆதரித்துள்ளது.

மத்திய அரசுதான் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத செயல்களில் ஈடுபடுகிறது என்றால் தமிழக அரசின் நடவடிக்கைகள் அதற்கு மேலாகவுள்ளது.

காவிரியில் அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசு, அனைத்துக் கட்சித் தலை வர்களுடன் பிரதமரை சந்திக்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசோ கடிதம் எழுதினாலே கடமை முடிந்ததாக கருதுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகளின் தவறான பாதையை மக்களுக்கு உணர்த்த திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x