

வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்றார் கனிமொழி. அங்கு அவரது வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். அதிகாரி விவகாரத்தில் நியாயம் கிடைக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
கர்நாடகாவில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அதைப்போலவே, தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றார். முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை" என்றார்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ண மூர்த்தி பெயரும் தொடர்புபடுத்தப்பட்டு அவர் பதவி இழந்தார்.
இதனால், பல்வேறு அரசியல் தலைவர்கள் முத்துக்குமாரசாமி மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் அடிப்படையில், முத்துக்குமாரசாமி மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.