Last Updated : 25 Mar, 2015 10:27 AM

 

Published : 25 Mar 2015 10:27 AM
Last Updated : 25 Mar 2015 10:27 AM

உளவியல் ஆலோசனையால் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்: நடமாடும் உளவியல் ஆலோசனை மைய ஆலோசகர் தகவல்

பள்ளி மாணவ, மாணவிகளின் மனஉளைச்சல், மனஇறுக்கம், பதற்றம், கற்றலில் குறைபாடு, தேர்வு பயம், ஆசிரியர்-பெற்றோரிடையே உறவு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழகத்தை 10 மண்டலங்களாகப் பிரித்து மண்டலத்துக்கு ஒரு உளவியல் ஆலோசகர், உதவியாளர் வீதம் நடமாடும் ஆலோசனை மையங்களை கடந்த 2013-லிருந்து செயல்படுத்தி வருகிறது.

இக்குழுவினர் தினமும் ஒன்று அல்லது இரண்டு பள்ளிகளுக்குச் சென்று பொதுவாகவும், சிறப்பு ஆலோசனை தேவைப்படுவோருக்கு தனியாகவும் ஆலோசனை அளிக் கின்றனர். இந்த ஆலோசனை மூலம் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதோடு, மாணவர்களிடம் பண்புடன் நடந்து கொள்ளும் திறன் அதிகரித்து வருகிறது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல உளவியல் ஆலோசகர் எம்.நிர்மல்குமார் கூறியதாவது:

‘‘எல்லாப் பள்ளிகளுக்கும் நாங்கள் சென்று வருகிறோம். சில பள்ளிகளில் காணப்பட்ட மாணவர்கள் வருகை குறைவு, தேர்ச்சி விகிதம் குறைவு, ஆசிரியர்- மாணவர்களிடையே கருத்து மோதல், தற்கொலை முயற்சி, ஒழுங்கீனமாக நடந்துகொள்ளுதல் போன்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் துக்கு வரும் புகாரைப் பின்பற்றி அந்தப் பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இதில் தனிப்பட்ட முறையில் ஆலோசனை தேவைப்படுவோருக்கு தனி அறையில் வைத்து ஆலோசனை கொடுக்கப்படுகிறது. செல்போன் வழியாகவும் ஆலோசனை அளிக்கப் படுகிறது. மாணவர்களிடம் இருந்து துண்டுச்சீட்டு மூலம் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையிலும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

இதில் பெற்றோருக்கிடையே மோதலால் பிள்ளைகள் பாதிக்கப் படுதல், பிள்ளைகளின் கோரிக்கை களை பெற்றோர் ஏற்க மறுத்தல், தந்தை மதுகுடித்தல், பிள்ளைகளைச் சம்பாதிக்கத் தூண்டுவதால்தான் பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன.

தற்போது ஸ்மார்ட் போன் மூலம் தேவையற்ற தகவல்கள், படங்களைப் பார்த்து மனநிலை பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கப்படுகிறது. இதனால் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.

பொதுத்தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றால் எங்கு சேரலாம், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சமூக அமைப்புகளும் தங்கள் பங்களிப்பாக, மாணவர்களின் பார்வையில் படும்படியாக விழிப்புணர்வு பேனர்களை பொது இடங்களில் வைத்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x