

செங்கல்பட்டில், 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 பேருக்கு தனியார் பள்ளி நிர்வாகம் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கவில்லை என்ற புகார் தொடர்பாக மாவட்ட கல்வித் துறை விசாரணை மேற்கொண்டது. அதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்ததாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தினகரன், பிரபு, பிரேம்சாய், ராஜேஷ், ரஞ்சித்குமார், ரவிக்குமார், ஆர்யா, யோகேஷ் ஆகிய 8 மாணவர்கள், அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படவில்லை என அவர்களது பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி உத்தரவின் பேரில், செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேற்று தனியார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பந்தப்பட்ட 8 மாணவர்களும் அரையாண்டு தேர்வுக்கு பிறகு பள்ளிக்கு வரவில்லை. ஹால் டிக்கெட் பெறுவதற்கு கூட அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்துள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: தனியார் பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், குறிப்பிட்ட 8 மாணவர்கள் மட்டும் கடந்த அரையாண்டு தேர்வுக்கு பிறகு பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிந்தது. எனினும், பெற்றோர்களிடம் பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம்.
இதில், பிரேம்சாய் என்ற மாணவன் மட்டும் நேற்று பள்ளியில் ஹால் டிக்கெட் பெற்று தேர்வு எழுதினான். மற்ற மாணவர்கள் யாரும் வரவில்லை. 8 மாணவர்களும் கடந்த 3 மாதங்களாக பள்ளிக்கு வராதது தொடர்பாக விசாரிக்கவில்லை. தேர்வு தொடங்குவதற்கு முன்பே பெற்றோர்கள் ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்பது புரியவில்லை. அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்திய பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என்றார்.