Published : 17 Mar 2015 08:39 AM
Last Updated : 17 Mar 2015 08:39 AM

சென்னை மருத்துவக் கல்லூரியில் பழைய வளாகத்தில் அருங்காட்சியகமாகும் உடற்கூறுயியல் துறை கட்டடம்: முன்னாள் மாணவர்கள் முதல் கட்டமாக ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை மருத்துவக் கல்லூரி பழைய வளாகத்தில் உள்ள உடற்கூறுயியல் துறை கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. இதற்காக கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலர் முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்தனர்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் 180-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. மத்திய சிறை இருந்த இடத்துக்கு கல்லூரி மாற்றப்பட்டுவிட்ட நிலையில், ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பழைய கல்லூரி வளாகத்தில் உள்ள உடற்கூறுயியல் கட்டடத்தை (அனாடாமி- Red Fort) அருங்காட்சியகமாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு உதவும் வகையில் இங்கு 1961-ம் ஆண்டு மருத்துவம் படித்த முன்னாள் மாணவர்களான டாக்டர்கள் பத்ரிநாத், கேசவராம், மார்த்தாண்டம், வைத்தியநாதன், உதயா ஆகியோர் இணைந்து, முதல் கட்டமாக ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலையை கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.விமலாவிடம் நேற்று வழங்கினர்.

உடற்கூறுயியல் துறை இயக்குநர் சுதா சேஷய்யன், துறை பேராசிரியர் வித்யா, முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் பாலசுப்பிரமணியம், ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக உடற்கூறுயி யல் துறை இயக்குநர் சுதா சேஷய்யன் கூறியதாவது:

1835-ல் மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூலாக தொடங்கப்பட்டு, பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியாக மாறியது. இந்தியாவில் தொடங்கப்பட்ட 2-வது மருத்துவக் கல்லூரி என்ற பெருமைமிக்க இந்தக் கல்லூரியில்தான் பல சிறப்பு சிகிச்சைகள் மற்றும் பல்வேறு துறைகள் முதலில் தொடங்கப்பட்டன. இந்தக் கல்லூரியின் முக்கிய அடையாளம் 100 ஆண்டுகளுக்கும் மேலான- சிவப்பு நிறத்தில் கோட்டை வடிவில் கட்டப்பட்ட- கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் உடற்கூறுயியல் துறை கட்டடம்.

மருத்துவம் படிக்க வரும் மாணவர்களுக்கு, முதலில் உடற் கூறுயியல் துறை கட்டிடத்தில் இறந்த உடல்களை வைத்து வகுப்புகள் எடுக்கப்படும். எனவே, உடற்கூறுயியல் துறையை இங்கு படித்த மாணவர்களால் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மத்திய சிறை இருந்த இடத்துக்கு கல்லூரி மாற்றப்பட்டுவிட்டதால், உடற்கூறுயியல் துறை கட்டடத்தை புதுப்பித்து அருங்காட்சியகமாக மாற்றவுள்ளோம்.

உடற்கூறுயியல் துறை கட்ட டத்தை புதுப்பித்து அருங் காட்சியகமாக மாற்றுவதற்காக முதல் கட்டமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 1961-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ரூ.2 லட்சம் நிதியை வழங்கியுள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் நிதியுதவி அளிக்கலாம். இதற்கு 044-25305111, 044-25305112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x