Published : 21 Mar 2015 09:28 AM
Last Updated : 21 Mar 2015 09:28 AM

கர்நாடக அரசு காவிரியில் அணை கட்ட ஆதாயத்துக்காக மத்திய அரசு உதவுகிறது: வைகோ குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக, காவிரியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு கர்நாடகத்துக்கு துணையாக இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக-வின் தருமபுரி மாவட்ட முன்னாள் செயலாளர் சம்பத் அண்மையில் சாலை விபத்தில் இறந்தார். அவரது உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நேற்று தருமபுரியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரியில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயலுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசுதான் காரணமாக உள்ளது. அந்த மாநிலத்தில் தங்கள் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுக ஆதரவை அளித்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை இது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும்.

எனவே தமிழகமே போர்க்கோலம் பூண்டு இந்த அணை கட்டும் பணியை எதிர்க்க வேண்டும். மீத்தேன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தஞ்சை, சிவகங்கை மாவட்டங்கள் அழிந்துவிடும் என்பதால் அதையும் எதிர்க்க வேண்டும். அதேபோல விவசாயிகளை நசுக்கும் வகையிலான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராகவும் விவசாயிகள் தீர்க்கமாக போராட வேண்டும். இந்த விவகாரங்களில் தீர்வு ஏற்படும் வரை மதிமுக தொடர்ந்து போராட்டங்களை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின்போது, மாநில நிர்வாகிகள் சத்யா, மாசிலாமணி, மாவட்டச் செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x