

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை தமிழக பாஜகவினர் கமலாலயத்தில் இன்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் போது தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் நதிகள் இணைப்புக்கு வித்திட்ட வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கப்படுவது மகிழ்ச்சியான நாளாகும். நதிகள் இணைக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு மாநிலங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இருக்காது. காவேரியின் குறுக்கே அணைகளை கட்டும் கர்நாடகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்து கட்சிகளுடன் இணைந்து இதனை நாங்களும் கண்டிக்கிறோம். ஆனால் இதற்காக தமிழகத்தில் முழு அடைப்பு செய்யத் தேவையில்லை. சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் சுய லாபத்துக்காக தமிழகத்தை போராட்டக்களமாக மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், “வாஜ்பாய் உருவாக்கிய அத்தனை திட்டங்களும் தொலைநோக்கு பார்வை கொண்டவை. அதனால்தான் அவருக்கு பாரத ரத்னா கொடுப்பதை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை. நதிகள் இணைப்புக்கு அடிக்கல் நாட்டியவர் வாஜ்பாய். அதனை மோடி அரசு நிறைவேற்றும்” என்றார்.