

சேலம் அருகே நடைபெற்ற கொள்ளை தொடர்பாக, தஞ்சா வூரைச் சேர்ந்த வழக்கறிஞரிடம் 1.5 கிலோ தங்கம், ரூ.8 லட்சத்தை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
தஞ்சை ஞானம் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜய குமார்(28). இவரது வீட்டில் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது வீட்டிலிருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும், ஞானம் நகரில் உள்ள அவரது உறவினரின் பழக்கடையிலிருந்து 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக் காக வழக்கறிஞர் விஜயகுமாரை தீவட்டிப்பட்டி போலீஸார் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற வனத் துறை அலுவலர் பொன்னுரங்கம் மற்றும் அவரது மனைவியை கடந்த 5-ம் தேதி ஒரு கும்பல் தாக்கி, பல லட்சம் பணம் மற்றும் 310 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை, தஞ்சை வழக்கறிஞர் விஜயகுமாரிடமும், சென்னையைச் சேர்ந்த ஒருவரிடமும் கொடுத்து வைத்துள் ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வழக்கறிஞர் விஜயகுமாரிடமிருந்து நகை, பணத்தை தீவட்டிப்பட்டி போலீஸார் பறிமுதல் செய்து, அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்” என்றனர்.