

பிப்ரவரி 10-ல் காந்திய மக்கள் இயக்கம் காந்திய மக்கள் கட்சியாக அவதாரம் எடுக்கிறது.
தமிழருவி மணியன் 'தி இந்து' வுக்கு அளித்த பேட்டி: "எந்த கட்சிக்குமே இன்றைக்கு கொள்கை இல்லை. அவர்களின் பேச்சுக்கும் நடைமுறைக்கும் சம்பந்தம் இல்லை. இதற்கு இடதுசாரிகளும் விதிவிலக்கில்லை.
தனிவாழ்வில் தூய்மை, பொது வாழ்வில் நேர்மை, வார்த்தைகளில் வாய்மை என்ற பண்புகளோடு இன்றைய அரசியல் உலகம் இல்லை. பொதுச் சொத்திலிருந்து செப்புக் காசைக் கூட சொந்த நலனுக்குப் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு இங்கே இடம் இல்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பவே காந்திய மக்கள் இயக்கம் கட்சியாக மாற்றமடைகிறது.
மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் இந்த இரண்டையும் தமிழகத்தில் சாதிப்பதற்கு நாங் கள் அரசியல் கட்சியாக அடி யெடுத்து வைக்கிறோம்.ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 45 ஆயிரம் கோடிக்கு குடிக்கிறார்கள். மது இருக்கும் வரை வறுமை இருக்கத்தான் செய்யும்.
ஊழலற்ற நிர்வாகம் இருந்தால் மட்டும் போதாது. நிறைவாக வும் நேர்மையாகவும், மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் நிர் வாக நடைமுறையும் அவசியம். இதை உருவாக்குவதற்குதான் இந்த இயக்கம் புறப்படுகிறது. 2016-ல் தமிழகத்தில் அமையும் கூட்டணி அரசு போடுகிற முதல் கையெழுத்தே, மது ஒழிப்புக்கான கையெழுத்தாகத்தான் இருக்கும். அத்தகைய கூட்டணியில் நாங்களும் அங்கம் வகிப்போம். பூரண மதுவிலக்கு, ஊழலற்ற நிர்வாகம் இந்த இரு கொள்கை களுக்கும் பொருத்தமானவர் வைகோ. எனவே 2016-ல் அவரை முதல்வராக்க எங்களது கட்சி முழுமூச்சுடன் பாடுபடும்.
எப்படியாவது பதவியை பெறுவது. அந்தப் பதவியின் மூலம் பணத்தை பெருக்குவது போன்றவற்றைத் தவிர வேறெதுவும் தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லை. ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் போல் நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் இல்லை. ஆம் ஆத்மியைப் பார்த்து சூடு போட்டுக் கொள்கிற அவசியம் எனக்கு இல்லை. என் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை நான் எந்தத் தேர்தலிலும் நிற்கமாட்டேன்" இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.
பிப்ரவரி 10-ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் எளிய விழாவில் காந்திய மக்கள் இயக்கத்தை காந்திய மக்கள் கட்சியாக அறிவிக்கிறார் தமிழருவி மணியன்.