

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய ‘காலத்தை வென்ற காவிய நட்பு’ என்ற இந்திய- ரஷ்ய நட்புறவு குறித்த நூலை நேற்று முன்தினம் இரவு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான ஆர்.நல்லகண்ணு வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியது: 1984-ல் சோவியத் நாட்டுக்கு சென்ற நெடுமாறன், அந்த நினைவுகளை 31 ஆண்டுகள் மனதில் சுமந்து, நிறைய தரவுகளைச் சேர்த்து பெரிய நூலாகத் தந்துள்ளார். இந்த நூலில் உள்ள 2 நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கலாச் சாரத் தொடர்புகள் குறித்த தகவல்கள் மனித குல விடுதலை வரலாற்றுக்கு புதிய வலுசேர்க்கக் கூடியவை.
ரஷ்யாவில் முதலில் புரட்சி ஏற்பட்டதற்கு, அந்த நாட்டின் சூழலும், அதன் வளமான இலக்கி யங்களுமே காரணமாக இருந்தன. இந்தியாவின் செல்வங்களைத் தேடி வந்தவர்கள் மத்தியில், இந்த மக்களுடன் நீண்ட நாகரி கத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த ரஷ்யாவைப் பற்றி வந்துள்ள இந்த நூல் படிப்பதற்கு மட்டுமில்லாமல், தமிழர்களின் பார்வையை உலகப் பார்வையாக விரிவுபடுத்தும் விதமாக உள்ளது” என்றார் நல்லகண்ணு.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியபோது, “ரஷ்யாவில் 1917-ல் ஏற்பட்ட புரட்சி, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தது.
இந்தியா- சோவியத் யூனியன் இடையே இருந்த கலாச்சார, இலக்கிய, அரசியல் உறவுகள் ஆத்மார்த்தமானவை. அதை மீண்டும் துளிர்விட வைக்கும் நம்பிக்கையை இந்த நூல் ஏற்படுத்துகிறது” என்றார் சந்துரு.