Published : 26 Mar 2015 11:01 AM
Last Updated : 26 Mar 2015 11:01 AM

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: நாடு முழுவதும் 51 கட்சிகளிடம் கருத்துக் கேட்பு

மாநில சட்டப்பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நாடு முழுவதும் 51 கட்சிகளுக்கு கடிதம் எழுதி கருத்துக் கேட்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு.

1952-லிருந்து 1962 வரை நடந்த நான்கு பொதுத் தேர்தல்களில் மட்டுமே நாடு முழுவதும் ஒரே நேரத் தில் சட்டப்பேரவைகளுக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் சட்டப் பேரவை தேர்தல்களை நடத்துவதற்கு சுமார் ரூ.3000 கோடி, நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சுமார் ரூ.8000 கோடி என அரசுக்கு செலவாகிறது. இப்படி வீண் செலவை தவிர்ப்பதற் காகவும் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான 31 பேர் கொண்ட சட்டம், நீதி, பணி யாளர் நலன் மற்றும் மக்கள் குறை தீர்ப்பு அமைச்சகங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கடந்த 3 தினங்களாக கேட்டு வருகிறது.

இதுகுறித்து ’தி இந்து’விடம் சுதர்சன நாச்சியப்பன் நேற்று கூறியதாவது:

இரண்டு தேர்தல்களும் தனித் தனியாக நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல்களுக்கான செலவை மத்திய அரசும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான செலவை அந்தந்த மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் செலவை மத்திய - மாநில அரசுகள் பங்கிட்டுக் கொள்ளமுடியும்.

ஆனாலும் சில நடைமுறை சிக்கல் களும் இதில் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் என்று சொன்னால் அந்த நேரத்தில் மாநிலங்களை ஆளும் கட்சிகள் தங்களது எஞ்சிய கால ஆட்சியை தியாகம் செய்ய வேண்டும்.

இதற்கு எத்தனை கட்சிகள் ஒத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை. முதல் கட்டமாக மத்திய தேர்தல் ஆணையர்களை அழைத்து கருத்து கேட்டோம். அடுத்த கட்டமாக 6 தேசிய கட்சிகளுக்கும் அங்கீகரிக் கப்பட்ட 45 மாநிலக் கட்சிகளுக்கும் கடிதம் எழுத உள்ளோம். அடுத்ததாக மத்திய அரசிடமும் கருத்துக் கேட்ட பிறகு எங்களது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x